சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Saturday, November 6th, 2021

சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிவாயு துறையில் பாரிய மாபியாவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாபியாவினால் லிட்ரோ நிறுவனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயசிங்க குறிப்பிடுகின்றார்.

உள்ளூர் எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரின் கப்பலின் அச்சுறுத்தல் காரணமாக நிறுவனத்திற்கு தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாமல் போனதாகவும், இதனால் லிட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை கூட மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 28 ஆம் திகதிமுதல் நவம்பர் 1 ஆம் திகதி வரை ஒரு கேஸ் சிலிண்டரை கூட அந்த நிறுவனத்தால் சந்தைக்கு வெளியிட முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் எரிவாயு மாபியா குறித்த உண்மைகளை மக்களுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி கோரியதாகவும் அதன் பிரகாரம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த தீர்மானித்ததாகவும் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளாக மாபியா வேறு எந்த நிறுவனத்தையும் எரிவாயு துறையில் நுழைய அனுமதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: