நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டத்தில் இலங்கை!

Monday, November 1st, 2021

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 5வது கூட்டத்தொடரின் பரிசீலனைக்காக 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 – 29 வரை நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்கான நிரந்தரப் பிரதிநிதிகள் குழுவின் 8 ஆவது வருடாந்த துணைக் குழுக் கூட்டத்தில் நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான வரைவுத் தீர்மானத்தை இலங்கை சமர்ப்பித்தது.

நைதரசன் சுழற்சியில் செயற்படுவதற்கான பொதுவான கட்டமைப்பை வழங்கிய ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 4வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக இலங்கையால் முன்மொழியப்பட்ட தீர்மானம் கருதப்பட்டது.

நிரந்தரப் பிரதிநிதிகள் குழுவின் 8வது வருடாந்த உபகுழுக் கூட்டத்தில் வரைவுத் தீர்மானத்தை இலங்கை சமர்ப்பித்தமையானது, அதன் நோக்கத்தை விளக்குவதாக ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியும் கென்யாவிற்கான உயர்ஸ்தானிகருமான வேலுப்பிள்ளை கனநாதன் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவையின் 5வது கூட்டத்தொடரில் விரிவான நடவடிக்கையை முன்மொழிந்துள்ள இந்தத் தீர்மானமானது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 4வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கான வழியைத் தயாரித்து, நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான புதிய பெறுமதி உட்சேரப்பைக் கொண்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் கனநாதன் மேலும் குறிப்பிட்டார்.

நைதரசன் சுழற்சியின் அனைத்துக் கோளங்களையும் உள்ளடக்கி 2030ஆம் ஆண்டளவில் நைதரசன் கழிவுகளை அரைவாசியாகக் குறைப்பதில் கவனம் செலுத்தி, நிலையான நைதரசன் முகாமைத்துவத்திற்குத் தீர்வு காண்பதற்கான இடை மாநாட்டு நைதரசன் ஒருங்கிணைப்புப் பொறிமுறையை நிறுவியதன் மூலம் இந்த வரைவுத் தீர்மானம் ஆதரிக்கப்பட்டதாக உயர்ஸ்தானிகர் கனநாதன் சுட்டிக்காட்டினார்.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் புதிய கூறுகளை உருவாக்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்கிய 2019 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்புப் பிரகடனம் குறித்து இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்புப் பிரகடனம் என்று அழைக்கப்பட்ட நைதரசன் சவால்கள் மீதான நடவடிக்கைக்கான முன்மொழியப்பட்ட வரைபடத்தை, இலங்கை சுற்றாடல் அமைச்சின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அங்கீகரித்தமையை அவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய மையப் புள்ளியாக சுற்றாடல் அமைச்சு, ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டம் மற்றும் உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் 2030ஆம் ஆண்டளவில் நைதரசன் கழிவுகளை அரைவாசியாகக் குறைக்கும் உயரிய இலக்கை எட்டுவதற்காக பிரசாரம் செய்து வருவதுடன், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 5வது கூட்டத்தொடரின் பரிசீலனைக்காகவும், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 6வது கூட்டத்தொடரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் வரைவுத் தீர்மானம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவம் - இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர...
4 ஆம் திகதி கூடுகின்றது அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவிற்கு பொருந்தக் கூடிய கொள்கைகளை இலங்கை பூர்த்தி செய்யுமானால் ...