நாளைமுதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க அனுமதி – போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை -கல்வியமைச்சு அறிவிப்பு!

Sunday, January 24th, 2021

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மாணவர்களுக்காக மட்டும் நாளைமுதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மேல்மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் மாத்திரம் 11ஆம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளைமுதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சிசு செரிய பேருந்து சேவையை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தயாராகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் போக்குவரத்தின் போது சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் பொலிஸார் அதிக கவனம் செலுத்துவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளைமுதல் பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: