நான்கு மாதங்களில் 94 படுகொலைகள் – பொலிஸ்மா அதிபர்!

Saturday, April 28th, 2018

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 94 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 52 சம்பவங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

மக்களைப் பீதிக்கு உள்ளாக்கும் விதமாக இடம்பெற்ற ஆயுத முனைக் கொள்ளைகள் மற்றும் மனிதப் படுகொலைச் சம்பவங்கள் இந்த ஆண்டு 94 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் மட்டும் 52 சம்பவங்கள் உள்ளன.

மேல் மாகாணம் எனக் கூறும்போது கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் இதில் உள்ளடங்கும். அபிவிருத்தியைப் போன்றே மாவட்டங்களில் குற்றச் செயல்களும் அதிகமாக இடம்பெறுகின்றன. நான் புதிதாக மற்றொரு விடயத்தை ஆரம்பித்தேன். அதுதான் குற்றவாளிகளின் உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளோர், அவர்களுக்குத் தகவல் அளிப்போர் என்று அனைவரையும் சோதனை செய்வதாகும்.

அவசியம் ஏற்படின் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான நடைமுறையே அதுவாகும். குறிப்பாக இரவோடிரவாக வீடுகளைச் சோதனை செய்யும் நடவடிக்கைகளைக் கூட நாம் ஆரம்பித்துள்ளோம். மனித உரிமைச் சட்டங்களை நாம் மதிக்கின்றோம். எனினும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த நேரம் காலம் பாராது நாம் இரவோடிரவாக வேண்டுமானாலும் வீடுகளைச் சோதனை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. அதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம். நான் கொழும்பில் கடமையாற்றிய போது பாதாள உலகத்தைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்திய வழிமுறைகளை மீள நடைமுறைக்குக் கொண்டு வந்து இந்த பாதாள உலகின் அட்டகாசத்தை அடக்கத் தீர்மானித்துள்ளேன். அது தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

Related posts: