நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை – பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Friday, March 10th, 2023

இந்தியாவிலிருந்து இதுவரை முட்டை எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் 24 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஒரு குறுகிய காலத்திற்காக முட்டை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனினும் இதுவரை அது இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி எம். பி ரோஹண பண்டார எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக முட்டை உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்பட்டதால் முட்டைக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டதுடன் முட்டை விலையும் அதிகரித்தது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட போதும் அந்த விலையை தொடர்ச்சியாக பேண முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை நுகர்வுக்கான கேள்வி அதிகம் காணப்படுவதால் முட்டையை இறக்குமதி செய்து சாதாரண விலையில் சந்தையில் விநியோகிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.

முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்த போது முட்டை உற்பத்தி நாடுகளில் பறவைக் காய்ச்சல் நோய் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு பிரிவு விசேட அவதானம் செலுத்தி ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த 5 முட்டை உற்பத்தி நாடுகளிடமிருந்து முட்டை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்குவதால் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்து இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்ட போது இந்தியாவில் முட்டை உற்பத்தி நிறுவனங்களில் சிறந்த 3 நிறுவனங்களை இந்திய அரசாங்கம் பரிந்துரை செய்தது.

அந்த. நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது ஒரு நிறுவனம் மாத்திரம் நாம் கோரிய விலைக்கு முட்டையை வழங்க இணக்கம் தெரிவித்தது. எவ்வாறெனினும் இதுவரை ஒரு முட்டை கூட இறக்குமதி செய்யப்படவில்லை. முட்டை இறக்குமதி செய்து இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற செய்திகளிலும் எந்த உண்மையும் கிடையாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: