நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, November 28th, 2021

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது..

கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: