நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் – இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, September 24th, 2023

நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கனிய வளங்களை பாவனை செய்து மேற்கொள்ளும் உற்பத்திகளுக்கு உயர் பெறுமதியை வழங்க முடியும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய இந்நாட்டின் அரச நிதியில் இயங்கி வந்த அரச நிறுவனங்களை சுய உற்பத்தித் திறனுடன் இயங்கும் நிறுவனங்களாக மாற்றி வருகின்றோம். உலகின் பிரதான கடற்கரைப் பரப்பை கொண்டுள்ள நாடு என்ற வகையில், இயற்கை அழகும், இயற்கை வளங்கள் நிறைந்ததுமான இந்நாட்டின் கடற்கரைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான கரையோரங்களில் கடல் அரிப்பு நிகழும் போது அந்த பிரச்சினைக்கு அரசாங்க நிதியில் தீர்வுகளை வழங்கிவந்த கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் தற்போது சுற்றுலாத்துறையுடன் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மறு முனையில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் சிறு மற்றும் மத்திய பரிமாண, பாரிய ஹோட்டல்கள் முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயங்களில் அரசாங்கம் தலையீடு செய்து நீண்டகாலம் காணப்படும் கட்டிடங்களில் கட்டாயமாக அகற்ற வேண்டியவைகளை அகற்றவும், சுற்றுலாத்துறை முன்னேற்றத்துக்கு உதவுவோருக்கு அவசியமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா , அவுஸ்திரேலியா, மாலைதீவுகளில் கடற்கரை வளம் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. இலங்கையின் கலாசாரத்திற்கு இணங்க நாமும் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்தோடு கடற்கரை வலயங்களை கலாசார நிகழ்வுகள், சிறுவர் நிகழ்வுகள் உள்ளிட்ட விடயங்களுக்காகவும் நாம் வழங்குகிறோம். அதனால் திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் குறிப்பிட்டளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: