நவீனத்துவத்தை காரணம் காட்டி மனிதன் ஒருவனை பூரணமானவனாக மாற்றும் ஆற்றல் கொண்ட வாசிப்பு பழக்கத்தை கைவிட முடியாது – வாசிப்பு தினத்தில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாதம் – 2021 இக்கான நிகழ்வுகள் இன்றையதினம் வேலணை முருகன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வு கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வுகள் இன்றையதினம் (22.02.2022) பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தலைமை உரையாற்றிய தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிக்கையில் – இன்றைய நவீன காலத்தின் கால ஓட்டத்தால் இளம் சமூகத்தினரிடையே வாசிப்பின் அவசியம் குறைந்து வருகின்றது.

அதுமட்டுமல்லாது நூலகங்களை நாடிச் செல்லும் பழக்கமும் மாணவர்களிடம் இல்லாது போகும் நிலை காணப்படுகின்றது.

அதேநேரம் நவினத்துவம் என்பது எமது இளம் சமூதாயத்தினரிடையே அவசியமானதும் ஒன்றுதான். ஆனால் அந்த நவீனத்துவத்தை காரணம் காட்டி மனிதன் ஒருவனை பூரணமானவனாக மாற்றும் ஆற்றல் கொண்ட வாசிப்பு  பழக்கத்தை கைவிடவும் முடியாது.

இதேநேரம் எமது பிரதேசத்தில் பல நூலகங்கள் உள்ளன. இங்கு குறைந்தது பத்திரிகை பார்ப்பதற்கு கூட வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில் நாம் எமது பிரதேசத்தின் இளம் சமுதாயத்தினரிடையே வாசிப்பின் மதகத்துவத்தை எடுத்துரைத்து அதற்கான விழிப்புணர்வுகளை கொண்டு சென்று மாணவர்களை வாசிப்பின்பால் ஈர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நூலகங்களை இன்றைய காலகட்டத்தின் தேவைகருதியதாக நவினப்படுத்தும் தேவையும் எமக்கு உண்டு. அந்தவகையில் நூலகங்களிடையே நாவீனத்துவத்தை கொண்டுவந்து  எமது பிரதேச இளம் சமூகத்தினரிடையே வாசிப்பின் மகத்துவத்தை கொண்டு செல்வதுடன் வாசகர் வட்டத்தையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்றைய நிகழ்வில் வாசிப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசின் நஞ்சற்ற உணவை நோக்கிய பயணத்தை வலுச் சேர்க்கும் வகையில் வீட்டுத் தோட்டத்தை மேற்கொண்டு  வெற்றிகரமாக சிறந்த அறுவடையை பெற்றவர்களையும் பாராட்டி பரிசில்களை வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: