நட்பு நாடுகளிடம் உதவிகளைக் கோருவது தொடர்பில் ஆராய்வு – அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானம் – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நட்பு நாடுகளிடம் உதவிகளை கோருவது தொடர்பில் ஆராய்வதற்கும், அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சர்கள் குழுவை பெயரிடும் அதிகாரம் அரச தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார் என, அமைச்சர் டளஸ் அழகப்பெரும கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர் –
“வரலாற்று ரீதியாக, நாடு பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொண்ட சந்தர்ப்பங்களில் எம்முடன் இணைந்து செயற்பட்ட பல நாடுகள் காணப்படுகின்றன.
இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவைக்குள் குழு ஒன்றை அமைக்குமாறு நிதியமைச்சர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஆகவே அந்த அமைச்சர்களை பெயரிடும் பொறுப்பை நாம் அரச தலைவருக்கு வழங்கினோம். ஆகவே குழு ஒன்று இதுவரை நியமிக்கப்படவில்லை. யோசனை முன்வைக்கப்பட்டதோடு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த சந்தர்ப்பத்தில் இணைந்து செயற்பட்ட, ஒத்துழைப்புடன் செயற்பட்ட பல நாடுகள் காணப்படுகின்றன. அடுத்த அமைச்சரவை சந்திப்பில் இது தொடர்பில் அரச தலைவர் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|