தொடரும் மழையால் கிளிநொச்சியில் 7000 க்கும் அதிகமானோர் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களிலே இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கரைச்சி, மற்றும் கண்டாவளையை சேர்ந்தவர்கள் எனவும் கரைச்சியை சேர்ந்த 49 குடும்பங்களை சேர்ந்த 152 பேர் மருதநகர் பொதுநோக்கு மண்டபம் மற்றும் தாரணி குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கண்டாவளையை சேர்ந்த 26 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் சிவபுரம் முன்பள்ளி, புன்னைநீராவி பொது மண்டபம் மற்றும் நாதன் குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

இதேவேளை, மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது - அரச மருத்துவ அதிகார...
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் சூழலை இல்லாதொழிக்க வேண்டும் - இல்லாது பிரதிப் பணிப்பாளர் சி.யமுன...
புதிய பிரமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் ...