தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தத்தை அடையாளம் காண்பதற்கு 21 அரசியல் கட்சிகளிடம் இருந்து 155 முன்மொழிவுகள் – விசேட நாடாளுமன்ற குழு அறிவிப்பு!

Monday, July 19th, 2021

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற குழுவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட 21 அரசியல் கட்சிகளிடம் இருந்து முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கு மேலதிகமாக, பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் 155 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் செயலாளரும், நாடாளுமன்ற பணியாள் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான விசேட நாடாளுமன்ற குழுவுக்கு, முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை சமர்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் ஜுலை 15 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மௌபிம ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லிபரல் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் மகாசபை, ஐக்கிய சமாதான முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி, ஜனநாயகக் கூட்டணி, சிங்களதீப ஜாதிக பெரமுன, இலங்கை சமசமாஜக் கட்சி, சமத்துவக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், குறித்த விசேட நாடாளுமன்றக் குழுவின் எதிர்காலக் கூட்டங்களில் ஆராயப்படவுள்ளன. 

அதேநேரம், கடந்த 14 ஆம் திகதி விசேட குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த நாட்டின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ஃரல் அமைப்பு தமது யோசனைகளை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.  விசேட குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் நோயாளிகள் - பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள் இலங்கையில் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப...