நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வெற்றுக்கொடுக்க விரைவான நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, July 10th, 2021

நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடு மற்றும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொரளையில் உள்ள சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண – மில்லேவ தோட்டத்துக்குச் சொந்தமான காணியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

சிதைவடைந்த பழைய கட்டிடங்கள், அதிக நெரிசல் மற்றும் வேறு வெளிப்புறக் காரணிகளால், குறித்த சிறைச்சாலையை வேறு ஓர் இடத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டிய தேவை, நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதி மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த வீடியோ விளக்கக் காட்சியொன்று முன்வைக்கப்பட்டதுடன், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அது தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தும் இருந்தார்.

புதிய சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஹொரண – மில்லேவ தோட்டத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை, சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் சமுதாயச் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை, இந்த உத்தேச வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

குறித்த சிறைச்சாலைக் கட்டிடத்தொகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அத்துடன் குறித்த அத்தோட்டத்தில் வசிப்பவர்களைச் சந்தித்து, அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட ஜனாதிபதி அவர்களது விவரங்களையும் கேட்டறிந்தார்.

இந்நிலையிலேயே குறித்த நிர்மாணப் பணிகள் காரணமாக மக்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடு மற்றும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: