தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிளிநொச்சி மாவட்ட ஆண்டிறுதி ஒன்றுகூடலில் ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர்!

Monday, January 11th, 2021


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட ஆண்டிறுதி ஒன்றுகூடல் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் கலந்து சிறப்பித்தார்.
மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தவேந்திரன் தலைமையில் ஜனவரி 7ம் திகதி மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் அலுவலர்களுக்கான பரிசில்களையும் மேலதிக இணைப்பாளர் வழங்கி வைத்தார்.
இளைஞர்களே ஒரு நாட்டின் எதிர்காலம் என்று கூறப்படுவதைப்போல, இப்போது நாமல் ராஜபக்ஷ என்கின்ற இளைஞரே துறைசார் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்ற இந்தக் காலப்பகுதியில், கிளிநொச்சி மாவட்ட இளைஞர்-யுவதியரின் வளர்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பங்களிப்புக்களைச் செய்யவிருப்பதாக இதன்போது மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாகவே, வடக்கில் இருக்கும் ஒரேயொரு சர்வதேச விளையாட்டரங்கான கிளிநொச்சி விளையாட்டரங்கை உடனடியாக மேம்படுத்தி இளைஞர்களின் பாவனைக்குக் கையளிக்கவேண்டும் என்று ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்து, அந்தப் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஊடாக வேகப்படுத்தியுள்ளார் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கையிலே இருக்கக்கூடிய மூன்று சர்வதேச தராதரத்திலான நீச்சல் தடாகங்களில் ஒன்று கிளிநொச்சி விளையாட்டரங்கில் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய றுஷாங்கன், அதையும், உள்ளக மற்றும் திறந்தவெளி விளையாட்டரங்கையும் விரைவில் சீர்ப்படுத்தி கிளிநொச்சி மாவட்ட இளைஞர்-யுவதியரின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோன்று, கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களின் தொழில்திறன் விருத்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவிருக்கிறது என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடன் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் பல்வேறு கைத்தொழில்துறை முயற்சிகள் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களும் விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Related posts: