தென்னை முறிந்து வீழ்ந்ததால் மாணவன் காயம் – மீசாலையில் சம்பவம்!

Saturday, February 2nd, 2019

கடும் காற்று வீசியபோது வீதியோரம் நின்றிருந்த தென்னை மரம் முறிந்து வீதியில் வீழ்ந்தபோது அதற்குள் அகப்பட்ட 13 வயது மாணவனின் தொடை எலும்பு முறிந்தது.

இந்தச் சம்பவம் மீசாலை வடக்கில் நேற்று காலை இடம்பெற்றது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்கும் இதே இடத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் கஜானன் (வயது 13) என்பவரே படுகாயமடைந்தார்.

அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் சென்ற ஈருருளியும் கடும் சேதமடைந்துள்ளது.

தென்மராட்சியில் முதன்மை வீதிகளில் பெரும்பாலான காணிகளில் உள்ள தென்னை மரங்கள் வீதியில் தேங்காய் விழும் நிலையில் காணப்படுகின்றன.

இவற்றைத் தறித்துப் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சிச் சபைகளுக்கு அறிவித்தும் பயன் கிடைக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

வீதியோரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்படும் தென்னை மரங்களைக் காணிகளின் உரிமையாளர்கள் தறிக்க வேண்டும் என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அடுத்த மாதம் காற்று ஆரம்பிக்கவுள்ளதால் வீதியோரம் காணப்படும் தென்னைமரங்களைத் தறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: