துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை!

Wednesday, May 19th, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில், அதன்பின்னர், நாளை பிற்பகல் 4 மணிக்கு குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி வரை இடம்பெறறுது.

இந்நிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று சபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும் விசேட பெரும்பான்மையும் அவசியம் என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் குறிப்பிட்ட சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பெற்றுக்கொடுத்துள்ள தீர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் உடன்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று மாலை அறிவித்திருந்தார்..

அதன்படி, குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதேநேரம், கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டமொன்று நேற்றையதினம் நடைபெற்றது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் கூறப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, அவசியமான திருத்தங்களை சட்டமூலத்தில் உள்ளீர்ப்பதற்கு தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆரம்பமாகின்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது, அரசாங்கம் குறித்த சட்டமூலத்திற்கான திருத்தங்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: