தீர்வின்றித் தொடர்கிறது எங்கள் துயரம்…..!! கவிதை!!

Thursday, May 26th, 2016

2016-05-08 அன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் கவிஞர் அமீன் அவர்களால் வடிக்கப்பட்டது கவிதையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

உண்ணும் நீரினும்
உயிரினும் இனிதாய்
ஒன்றிய தமிழே வணக்கம்!

தாய்க்குள்ளிருந்து நான்
வெளிவந்த கணம் தொட்டு
வாய்க்குள் அமுதாக
மொழி என்று நுழைந்தாய் நீ

இந்த மண்ணில் எந்தன்
பாட்டன் பெற்ற தமிழ் வாழ்வு
தந்தை பெற்ற தமிழ் வாழ்வு
சுற்றம் பெற்ற தமிழ் வாழ்வு
எல்லாமும் ஆகத்தான்
நான் என்று ஆனேன் நான்!

நான் – விரும்பினாலும் விட்டெறிந்து
விட முடியா என் தமிழே
உன்னை யன்றி நான் ஏது?
உனக்கு என் முதல் வணக்கம்!

வாழ்க்கை என்பது நாம் காணும்
வாழ்க்கை மட்டுமே அல்ல
என்பதை உங்களிடம்
சொல்லும் ஒரு நுட்பம் கவிதை!

அது நம் –
அற்பத்தனங்களின் ஊற்று முகங்களை
ஆழச் சென்று தேடிப் பிடிக்கிறது.
அதனால்தான்
அதைக் கேட்ட பிறகு நீங்கள் –
அதற்கு முன் இருந்த நீங்களல்ல.

என் கவிதைகள் –
என்னைப் பெற்று
உருவாக்கிய – என் சமூகத்திற்கு
நான் வழங்கும் தண்டனைகள்!

யாரையும் திருத்த
முடிகிறதோ இல்லையோ
தண்டனை தருவதை – நான்
நிறுத்துவதாயில்லை!

கடவுள் உண்டா என்று
யாரோ கேட்டதற்கு
மௌனமாயிருந்தாராம் புத்தர்.
வியந்து போய்ச் சீடர்கள்
“ஏன் மௌனம்?” என்றார்கள்.
புத்தர் அவர்களிடம் சொன்னார்:
“உண்டு என்பதற்கான
ருசு ஏதும் என்னிடமில்லை.”

அப்ப இல்லை என்று
சொல்லிவிட வேண்டியது தானே?

இல்லை என்று சொல்வதற்கும்
என்னிடம் எந்தவித ருசுவும் இல்லை
என்றாராம் புத்தர்.

வாத்தியக் கருவிக்குள்
வசித்திருக்கும் இசை போல
தன் ரகசியத்தை
மறைத்திருக்கும் இறையே!

ஒருவேளை நீங்கள்
உண்மையாகவே இருந்துவிட்டாலும்
என்னை ஒண்டுஞ் செய்யாமல் காக்க
வைத்தேன் உங்களுக்கும் வணக்கம்!

இந்த உலகத்தில்
எந்தவோர் இடத்திலும்
அநீதி நடக்கிற போதெல்லாம்
கோபமும் வெறுப்பும் கொண்டு நீ
குமுறி நடுங்குவாயானால்
நாம் இருவரும் தோழர்கள் என்றான்

ஆர்ஜென்டீனாவில் பிறந்து
கியூபாவில் தலைவனாகி
அதை உதறிவிட்டுப்
பொலிவியாவில் போய் மடிந்த
அந்த உலகமகா அழகன்!

அடுத்தவன் துன்பத்தைக்
கண்டு பொறுக்காத – அந்த
உணர்வினிலே ஒன்றாகி
வாழையடி வாழையென
வந்திங்கு காணுகின்ற
தோழமைகள் அத்தனை
பேருக்கும் என் வணக்கம்!

இதோ! பல பத்து வருசங்களின்
பிறகு வரும் இலங்கை யாப்பிலும்
எங்கள் பிரச்சினைக்குத் தீர்வை
எழுதாமல் ஒத்தி வைத்தால்

பிறகும் பல வருசம்
சொல்லியழக் குறை தொடரும்…
தமிழர் –
வாக்குகளைக் குறையாமல்
அள்ளிவிடத் தோதும் படும்.

மகிந்தவாயிருந்தால் என்ன
நாங்களே கொண்டுவந்த
மைத்திரியாய் இருந்தால் என்ன
அங்கு போய்ச்
சருவுதல் தானே ஒழியத் – தீர்வை
மருவுதல் அறிய மாட்டோம்.

இதை எதிர்த்தொண்டும்
கேளாமல் இருப்பதற்கு
எம் சனத்தின் தலைகளிலே
அரைத்துவிட வாகாகச்
சில கதைகள் இங்கு உண்டு.

உலகத்தார் ஒத்தபடி
வந்திஞ்சை உறுக்காமல்
ஒண்டுந் தராயினம் இவை…

நாங்கள் – ஒற்றுமையை
இன்னுமின்னும்
ஊண்டிக் காட்டினால்தான்
சர்வதேசம் பாத்தேதும் செய்யும்…

எண்டிவற்றைச் சொல்லித்
தேர்தலுக்குத் தேர்தல்
தீர்வு வரும் திகதியொன்றைக்
குறிப்பிட்டு முழக்கவும்
பிறகது எதிரியால் பிழைபட்டுப்
போனதை விளக்கவும் ஆகுமாம் தலை.

தமிழர்க்கு வாய்த்த தேர்தல்நாள்
தலைகளுக்கும் என் வணக்கம்!

தேர்தலோ ஜெனீவாவோ
இல்லையெண்டால்
தீர்வைப் பற்றி யோசிக்கவும்
ஒண்டுமில்லை
என்னுமொரு அடித்தெளிவில்
இந்த இடைப்பட்ட காலத்தில்
ஏதும் பிசங்காமல்
இருக்கின்ற எனதருமைச்
சனங்களுக்கும் என் வணக்கம்!

எத்தினை தேர்தல்கள் கடந்தாச்சு
சர்வதேசக் கதைகளுந்தான்
எத்தினையைக் கேட்டாச்சு!

ஜெனீவா Block பண்ணும்
ஐநா Avoid பண்ணும்
அமெரிக்காShoot பண்ணும்
இந்தியா எனிதிங் பண்ணும்…

ம்…ஹ_ம்…
பதின்மூண்டுக் கங்காலை
ஆரென்ன பண்ணுவினம்?
எண்-டாருக்கும் தெரியவில்லை

என்ன பண்ணிக் கிழிப்பம் எண்டும்
நம்பும்படி
இவர்களாரும் சொன்னதில்லை.

தாமே கொண்டு வந்ததெனச்
சொல்லும் தலைகளையும்
ஏதேனும் சாத்தியமென்றானதைச்
சொல்லவைக்கும் சூக்குமமும்
அறிந்தாரில்லை.

வேண்டாமெண்டு – துரத்தி
விட்டவரும் சரியில்லை
வெற்றி நமக்கெண்டு – தூக்கி
வைத்தவரும் இப்ப சரியில்லை
எண்டிட்டுத் தலைவர்கள் சும்மா இருக்க
பாத்திட்டுச் சனமும் சும்மா இருக்குது.

அடுத்த தேர்தலோ ஜெனீவாவோ
வரட்டும் தமிழ்ப் புளுகைக்
கேப்பமெண்டு காத்திருத்தல் மட்டும்தானா
தமிழர் நம் அரசியலின் அறிவு மட்டம்?

இப்பிடியே போனால்
பின்னாளில் வருகின்ற
பண்டைய படிவ
ஆய்வாளர் எங்களது
மண்டையோடுகளை ஆராய்ந்து
தம் முடிவை நிறுவக் கூடும் –

எவரெவரோ மிளகாய்
அரைக்க மிக வாகாக
வடிவமைந்த ஓடுகள்
இவைதானென்று!

வாழ்க்கை வாழ்க்கை என்கிறோமே
அது யாருடைய வாழ்க்கை?

வார்த்தை வல்லோர் கணக்குக்குள்
வருகின்ற வாழ்க்கை எது?

குந்த நிலம் இல்லை
குடிக்க நல்ல நீரில்லை
குடும்பம் பிழைக்க ஒரு
வேலை இல்லை – கூலி இல்லை
என்றிருப்போர்க் கெல்லாம் –

ஜெனீவாவில் பொறி செய்து
பொறி செய்து எலிப் பிடிக்கும்
விளையாட்டின் இறுதியிலே
பொசிப்பென்ன?

என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலிப் பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பிடி பொத்திப் பிடி அந்தோனி
பூறிக் கொண்டோடுது சிஞ்ஞோரே!

தீர்வும் இவர்களிடம்
பூறிக் கொண்டோடிய படி…

பண்ணாகத்தில
தனிநாடு கேட்ட நாம்
சுத்தி வந்து
சுன்னாகத்தில
தண்ணி கேட்டு நிக்கிறம்!

சிங்களவனைக் கேட்கையிலே
கிக்காக இருந்தது
எங்களவனைக் கேட்டவுடன்
‘ஸ்ரக்’காகி நிக்குது!

சொந்தமாய் சிந்திக்கச்
சோம்பல் படுவதாலே
சுமைகளை இறக்காமல்
துயர்படுதல் நீள்கிறது!

வடக்கும் கிழக்கும்
இணைஞ்சு கிடைச்சதை
தொண்ணூறில விட்டம்
பிறகு ரெண்டாயிரத்தில
சமஷ்டிக்கு நிகராய்
சந்திரிகா தந்ததைக்
கூட்டாளிகள் எரிக்க
இளிச்சபடி இருந்து – விட்டம்

இப்ப வடக்கைத் தனியாக
எடுத்து வைச்சுக் கொண்டு
தீர்மானம் போடுகிறோம்
வடக்கையும் கிழக்கையும்
இணைச்சுச் சமஷ்டிதான்
தமிழர்க்குத் தீர்வாய்
வரோணுமாம் எண்டு!

கிடைக்கா தெண்டதை
கிடைக்குமெண்டு நம்பி
கிடைச்சதை இனிக்
கிடைக்காதெண்டு மாக்கி
சரிஇ கிட்டாதாயின் அதை
வெட்டெனவும் மறக்காமல்
உன்ன உன்ன – அது
எட்டுமெனப் பறக்கின்ற
கெப்பர் நினைப்புகளையும்
விட்டொழிக்க முடியாமல்
இன்னுமின்னுமாய்
கெட்டழிஞ்சு போகுமோ
நந் தமிழ்க் குடி!

தீர்வின்றித் தொடர்கிறது
எங்கள் துயரம்
திறனிலியின் துயரம் போல்
அருவருப்பை அளிப்பது
அகிலத்தில் வேறுளதோ?

சிதையாத விதைகள்
முளைப்பதில்லை – எனில்
வேண்டியளவு சிதைந்து விட்டோம்
இனி – முளைப்பது தானே
நமக்கும் வேலை?

வன்முறையை விட்டால்
வழியில்லை என்று சொல்லி
வாழ்க்கை பறித்திந்த உடல்கள் மீது
வரைந்த வதைக் கதைகள்
ஏராளம் உண்டிங்கு!

அத்தனையும் –
இனமானம் பேசிப் பேசியே நாங்கள்
ஏமாந்து தொலைத்த
இளிச்சவாய்க் கதைகள்!

வெறுப்பையே வளர்த்து

விவேகத்தைக் கைவிட்ட
விசுக்கோத்துப் பரம்பரையின்
வெறுவாய்ச் சப்பல்கள்!

‘வழி தவறுமெனில் குறியும் தவறும்’
சிறிய விதி இதை அறியப்
பல உயிரைப் பறிகொடுத்தோம்!

எண்பத் தொன்பதில்
எடுத்ததையும் கைவிட்டுப்
பிறகு பெட்டை தந்ததையும்
பெருஞ் சபையில் எரிக்க விட்டு

இப்ப – இரண்டாயிரத்துப் பதினாறில்
வந்து நிண்டு
இன்னுமொரு ஆட்சி மாற்றம்
வரட்டும் பாப்பம்
என்பதா எங்களது காத்திருப்பு?

எல்லாக் கூத்துகளும்
இங்கு தேர்தல் வந்தால் தான்!
அதன் பிறகு –
விடிய விடிய கூத்தாடியவனின்
விழி கனத்த நித்திரை போல்
அயர்ந்து கிடக்கும் இந்த
வீரத் தமிழ்ச் சமூகம்!

எங்கள் தேசிய நீரோட்ட
அரசியல் என்பது –
ஆண்டுகள் பல கடந்தும்
துயரப்படும் மக்களுக்கு
விடிவு காலம் வருகிறது
விடிவு காலம் வருகிறது
என்று குடுகுடுப்பை அடிக்கும்
ஒரு போதையூட்டும் மாயமாக
தேர்தல் தோறும் எழும் கேளிக்கையாக
மட்டுமே உள்ளதை யார் மறுப்பீர்?

ஆழமிகு நீர்த் தடத்தில்
கால் தடவி வழியறியும்
உள்ளுணர்வின் உபாயம் போல்

‘சர்வதேசத்தார் ஏதும்
செய்வார் தானே!’
என்றுள்ளே ஓடும் ஒரு
குத்துமதிப்புக்
குதூகலத்தில் வாழ்பவர் நாம்!

இழந்து கொண்டே இருப்பதுதான்
வாழ்க்கை என்ற
பெருமூச்சுத் தத்துவத்தை
ஏற்றுப் பழகி விட்டோம்.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
வாழ்வது தானே?
கொண்டாடத்தான் இந்த வாழ்க்கை –
குந்தி இருந்து
குறை சொல்லி அழுவதற்கல்ல.

நமக்கிங்கே
சிரிப்புக்கு என்ன பஞ்சம்?

இலங்கை ஒரு
ஜனநாயக சோஷலிசக்
குடியரசு என்று
அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது
நம் – அரசியலமைப்புச் சட்டத்திலேயே
இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்
ஏராளம் இருக்கிறது.

நமக்கிங்கே சிரிப்புக்கு
என்ன பஞ்சம்?

அனைத்தும் அறிந்தவர்கள்
நம் அரசியல் ஆய்வாளர்கள்!

எந்த ஆட்சி வந்தாலும் – நமக்கு
எதுவும் நடக்காதென்பதை
ஐமிச்சம் ஏதுமின்றி அறிவிக்கிறார்கள்.

அப்பஇ என்னதான் செய்வதென்றால்
எவரும் அதைச் சொல்வதில்லை
ஆருக்கும் சொல்லத் தெரிவதில்லை.

எங்கள் இன்னல்களுக் கெல்லாம்
எதிரிகளே காரணம்
என்பதை அழகாக
விளக்கி விடுகிறார்கள்
விளக்கச் சங்கடமானவற்றையும் கூட
தமிழன் ஏன் அவற்றை
விளக்கத் தேவையில்லை
என்று விளக்கி விடுகிறார்கள்!

இப்படியே எதிரிகள் அனுப்பும்
குளிரால் கூட
எங்களுக்குச் சளி பிடித்து

இருமியபடி இருக்கிறோம் தொடர்ந்து.

ஆய்வுரைகளை எழுதுவதால்
அவர் – அறிஞர் என்றாவதில்லை
ரயிலும் கூடத்தான் தாலாட்டுகிறது
அதற்காக
தாயாகி விட முடியுமா அது?

நாம் எதை எதிர்க்கிறோமோ
அதைப் போலவே
ஆகிவிடுவோம் – அதனால் தான்

இனவாதிகளை எதிர்த்து
இனவாதிகளே சத்தமிடுவதாக
ஆகியிருக்கிறது சூழல்!

இவர்களது அரசியல்
தந்திரங்கள் எல்லாமே – முன்பு
வாத்தியிடம் நாம் வாங்கிய
பிரம்படிகள் போலத் தான்!

வலி தாளாமல் கையை இழுத்தால்
இன்னும் கூடுதலாய் அடிவிழும்.

வெளியாரை எங்களது
விதி மாற்றும் கடவுளராய்
அழுது தொழுதிருந்தால்
தொடர்ந்து
அடி வாங்குவதையும் நாங்கள்
நிறுத்தவே போவதில்லை.

இப்போதும் –
ரத்தத்தைச் சிதற வைக்கும்
சொற்களைத் தாங்கிய
பத்திரிகைகளோடு தான் – நமக்குப்
பகல் பொழுது ஆரம்பம்!

எல்லாத் திசைகளிலும் வெறுப்பு
இனமானம் காக்கும் எங்கள்
பேனாக்களிலிருந்தும்
ஒழுகுவதென்னவோ
நச்சுத் திராவகமே!

எட்டித் – துப்பவும் பெலமில்லா
இப்பவும் கூட – விட்டால்
வெட்டுவம் பிளப்பம் என்றேதான்
நட்டுவம் வாசிப்பு!

பல்லி உயிர் பிழைக்க
வாலை இழப்பது போல
நம்மோடிருக்கும் இந்த
வெறுப்பை இழந்தா லென்ன?

விரலிடுக்கில் சரியும்
ஆற்று மணலாக நம் வாழ்வு –
அசுரத்தனத்துடனே
கீழ்நோக்கி வீழ்கிறது.

தடுத்து நிறுத்திவிட
இன்னும் காணோம் வழி!

அறம் குலைந்து – எங்கள்
மனம் திறக்க மறுத்து – வெறும்
வயிறு திறந்து முளைவிட்ட
கருவின் பழி – அதுவே இன்றும்
நம் பின்னால் தொடரும்
இருளின் விழி!

வேறாரும் வந்து – நம்
விடியலைத் தந்துவிட்டுப்
போவாராம் என்ற
காத்திருப்பிலே எங்கள்
காலங் கழிகிறது!

கையீரம் படாமல்
கடலில் மீன் பிடித்துவிடக்
காத்திருக்கும் மடமை இது!

மடமை கூடத் தவறில்லை – அந்த
மடமையையே மேதமையாய்
நினைத்திருத்தல் மகா கொடுமை!

சண்டையில் வெல்வதல்ல
சண்டையைத் தவிர்ப்பதே
வீரமாம் என்றறிக!

இதை நான் சொன்னால்
கடுப்பாகி
வென்றவரிடம் போய்ச் சொல்
என்பீர்.

கேட்போரை
விஷயம் தெரிந்தவர்களாக்குவதே
கவிதையின் வேலை
விஷம் நிறைந்தவர்களாக்குவதல்ல
என்பதே என் பதிலாம்!

தணலைக் கொட்டியோர் மீதும்

தண்ணீரைத் தெளித்துவிட்டுத்
தமிழ் வாழ்வைச் சரிசெய்யும்
விவேகம் இங்கு வாய்க்காதோ?

எல்லோர் மனங்களிலும்
உள்ளே ஓர் ஆழத்தில்
பிறர் மீது சொரிகின்ற
அன்புண்டு கருணையுண்டு – அதைத்
தொட்டெழுப்ப முடியுமென்று
நம்பித் தொடங்குதற்கு
நாம் முதலில் முனைந்தால் என்ன?

இத்தனை அழிவுக்கும்
இன்றிருக்கும் கேட்டுக்கும்
எங்களது பிழை என்று
எதுவுமே இல்லை
என்பது தான் முழுச் சரியா?

எங்கள் பிழை ஒளித்து விட்டு
எதிரி பிழை திருத்திவிட
ஏலுமென்றா முயல்கின்றோம்?

என்னிடமா உன்னிடமா பிழை அதிகம்?
இதை நிரூபித்த பிறகுதான் உடன்படுவம்
என்று நாண்டபடி நிண்டு கொண்டால்
இன்னுந்தான் உதைபடுவம்.

அவரவர் சரிகளைச் சொல்வதால்
வருவதல்ல அமைதி
தத்தம் பிழைகளை
உணர்வதால் வருவது!

ஏதிலார் குற்றம் போல்
தங் குற்றம் காண்கிற் பின்
தீதுண்டோ தமிழர் நமக்கும்?

சட்டத்தை மீறுதல் மட்டுமே
குற்றம் அல்ல – மக்களை
வாழ விடாமல்
வைத்திருப்பதும் குற்றம்தான்!

வாழ்வில்லாமல் –
விடுதலைக்கோ மற்றுமுள்ள
உரிமைகட்கோ ஏது அர்த்தம்?

உலகம் மாறி வருகிறது
மற்றவர்களும் மாறுகிறார்கள்
வாளோடு முன்தோன்றிய
நமக்கு மட்டும்தான்
இருக்கவே இருக்கிறது – இன்னும்
கல்தோன்றி மண்தோன்றாக் காலம்!

நாம் மனிதர்கள் என்பதன்
ஞாயந்தான் என்ன?
இனத்தை – தேசத்தை –
காலத்தை மீறித்
தன்னையே பிறனிலும்
காண்கின்ற தார்மீகம்!

மலை கண்டு நிமிர்ந்து
கடலோடு விரிந்து
மண்ணில் புழுவோடு
சேர்ந்து மனம் துடித்து
வாழ்ந்து களிக்க வேண்டும்
வந்துதித்த மனித வாழ்வை!

இந்த உலகம் தோன்றிய தெப்படி?
வேதம் கூறிய வழியிலா? அல்லது
மோசஸ் கூறிய வழியிலா? இல்லை
டார்வின் கூறிய வழியிலா?
என்பது நமக்குப் பிரச்சினை இல்லை.

அது எப்படியாவது
இருந்துவிட்டுப் போகட்டும்…

இந்த உலகத்தில் நன்றாய்
வாழ்வது எப்படி?
என்பது தானே நமக்குப் பிரச்சினை!

தங்கள் அதிகாரத்தைப்
பிள்ளைகள் மேல்
திணிக்காத தந்தையர்
எவருள்ளார் இங்கே?

சமூக ஒழுங்கின் விதியெனவே – இதை
ஏற்றுக் கொண்டிருப்பவர் நாங்கள்!

ஆட்சியாளர்களின்
அதிகாரமும் அவ்விதமே!
அதிகாரத்தின் இயல்பை
நாம் அறிந்து கொண்டால் – நமது
பொய்யான ஆவேசங்கள்
சில தணியலாம்!
அடுத்தது பேச மனம் கனியலாம்!
அவரவர் பண்பறிந்து
நன்றாற்றும் பாடிங்கு புலரலாம்!

வேண்டாததைச் செதுக்கி
விலக்கிவிடத் தெரிந்து விட்டால்
கல்லும் கூட மெல்லக்
கடவுளாய் மாறிடுமே!

களைகளை நீக்கு
பயிர் உன்னை வாழ்த்தும்!
களைகளை நீக்கு
கதிர் உன்னை வாழ்த்தும்!
களைகளை நீக்கு
நிலம் உன்னை வாழ்த்தும்!

Related posts:

வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனது செயற்பாட்டைக் கண்டித்தார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா.....
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிப...
அரச சேவையில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் வலியுறுத...

கடல் வழியாக சட்டவிரோதமாக வடபகுதிக்கு வருவோரால் வடக்கில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – எச்சரிக்கிறத...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!
சீரற்ற காலநிலையால் 14,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன - சபையில் அமைச்சர் கஞ்சன தெரிவி...