கிளிநொச்சி மாவட்ட உற்பத்தி கூட்டுறவு கருத்திட்டங்களை வினைத்திறனாக்குவது தொடர்பில் ஆராய்வு!

Saturday, January 9th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட உற்பத்திக் கூட்டுறவு கருத்திட்டங்களை வினைத்திறன் உடையவையாக ஆக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண ரீதியாக 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் பெருமளவு நிதி முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் வினைத்திறனுடன் செயலாற்றாதது குறித்து, கடந்த டிசம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் சுட்டிக்காட்டியதையடுத்து இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் றூபாவதி கேதீஸவரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாகாண கூட்டுறவு ஆணையாளர் வாகீசன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோருடன், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஒவ்வொரு திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறு செயற்படுத்தப்பட்ட 15 திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிறிபாஸ்கரன் ஒவ்வொன்றாக அறிக்கையிட, அந்தந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை, அவை வினைத்திறனுடன் செயற்படாமைக்கான காரணங்கள் குறித்து அந்தந்த கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் உற்பத்தி ஆரம்பிக்கப்படாத நிலையிலும், சில திட்டங்களுக்கான கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படாமலும், இன்னும் சில திட்டங்கள் குறைந்தளவு வினைத்திறனுடன் செயற்பட்டு வருவதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தமது அறிக்கையில் விளக்கிக் கூறியிருந்தார்

ஒவ்வொரு திட்டங்களின் நிலைமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், அந்தந்தத் திட்டங்களை வினைத்திறனுடன் மீளவும் செயலாற்றச் செய்யும் வகையில், மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து அந்தந்தத் திட்டங்களை விரைவில் வினைத்திறனாக்குவது என்று இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: