தீபாவளி கொத்தணியொன்றை உருவாக்க வழிவகை செய்யாதீர் – வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வலியுறுத்து!

Wednesday, November 3rd, 2021

வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றி செயற்படவேண்டும். கடந்த புதுவருடத்தின் போது ஏற்பட்ட கொத்தணி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இதுவரை வடமாகாணத்தில் 38 ஆயிரத்து 850 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல வடமாகாணத்தில் இதுவரை 833 கொரோனா இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

வடமாகாணத்தில் 30 வயதுக்கு மேல் 5 இலட்சத்து 72 ஆயிரத்து 933 பேர் முதல் டோஸையும் 4 இலட்சத்து 91 ஆயிரத்து 201 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். அதேபோல வடமாகாணத்தில் 20-30 வயதுக்குட்பட்டவர்களில் முதல் டோஸை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 820 பேரும் இரண்டாவது டோஸை 47 ஆயிரத்து 543 பேரும் பெற்றுள்ளனர்.

அதேபோன்று வடமாகாணத்தில் 16-19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் 43 ஆயிரத்து 34 பைசர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதேபோல 12-19 வயதுக்குட்பட்ட விசேட தேவை மற்றும் நாள்பட்ட நோய்களுக்குள்ளான 535 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது. வடக்கில் சுகாதார திணைக்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணி இன்று 3 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் ஆதார வைத்தியசாலைகளிலும் இடம்பெறும். சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறும். வடமாகாணத்தில் பத்தாயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: