தரமற்ற கல்வி முறை – ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கிய இலங்கை மருத்துவ சபை!

Thursday, September 10th, 2020

ரஸ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை இலங்கை மருத்துவ சபை தமது சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

இதில் உலகின் முன்னணி பல்கலைக்கழகமான பெட்ரைஸ் லூமும்பா பல்கலைக்கழகமும் அடங்குகின்றது. தீவிரமான ஆய்வின் பின்னரே இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற மருத்துவ சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கி வந்த லுமும்பா பல்கலைக்கழகம் என அறியப்பட்ட பீப்பல்ஸ் ப்ரன்ட்சிப் பல்கலைக்கழகம், பிரோகோவ் ரஸ்யன் தேசிய ஆராய்ச்சி மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ட்வர் அரச மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இவை இலங்கையின் 40 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் புலமைப்பரிசில்களை வழங்கி வந்தன. இதில் 5 புலமைப்பரிசில்கள் மருத்துவத்துறைக்கானவை.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை மருத்துவச் சபையின் பதிவாளர் வைத்திய கலாநிதி ஆனந்த ஹப்புகொட, நிபுணர் குழு கடந்த ஐந்து வருடங்களில் மேற்கொண்ட ஆராய்வின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தரமான கல்வி, இலங்கையின் சுகாதாரத்துறையுடன் இணங்கிச்செல்கின்ற கல்விமுறை என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

எனினும் மூன்று பல்கலைக்கழகங்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், நீக்கும் தீர்மானத்திற்கு முன்னதாக பட்டப்படிப்பை நிறைவு செய்த மற்றும் தற்போது கல்வி கற்கும் மாணவரும் மருத்துவ சபையில் பதிவு செய்வதில் தடையில்லை என்று இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: