தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப்போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Wednesday, July 6th, 2016நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் மீது செலுத்தப்படுகின்ற அவதானங்களைபோல் தமிழ் பகுதிகளை சாராத இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் மீது அரசு அவதானம் செலுத்துவதில்லை. இதனால் அங்குள்ள தமிழ் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறித்த பகுதிகளை சார்ந்த பாடசாலைகளுக்கு மேலும் தமிழ் மாணவர்களை ஈர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றையதினம்(5) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் எழுப்பப்படும் கேள்வி நேரத்திலேயே மேற்கண்ட கோரிக்கையை அவர் முன்வைத்து உரையாற்றினார்.
அங்கு அவர் குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் –
நாட்டில் வடக்க, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் மீது செலுத்தப்படுகின்ற அளவிலான அவதானங்களை மேற்படி பகுதிகளைச் சாராத தமிழ்ப் பாடசாலைகள் தொடர்பில் அரசு அவதானம் செலுத்துவதில்லை என ஒரு குற்றச்சாட்டு நிலவுகின்றது. குறிப்பாக நாட்டின் தென் மற்றும் வட மத்திய மாகானங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் தேசிய கல்விக் கொள்கைக்கு உட்படாத பாடசாலைகளாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
மாத்தறை மாவட்டத்தில், 5 தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ் மொழியையும் கொண்டதான இரு மொழிப் பாடசாலை ஒன்றும் உள்ளது. இவற்றில், மொரவக்க கல்வி வலயத்தில் இயங்கிவரும் ஹன்ட்போட் தமிழ் வித்தியாலயம், பேர்வலி தமிழ் வித்தியாலயம் மற்றும் இரு மொழிப் பாடசாலையான புளித மத்தியூஸ் பாடசாலை ஆகியவற்றில் கல்விப் பொது தராதரப் பத்திர (உயர்தர) வகுப்புகளில் கலைப் பிரிவு மட்டுமே உள்து.
அத்துடன் இதே கல்வி வலயத்திலுள்ள எனசல்வத்த தமிழ் வித்தியாலயம் மற்றும் அனிக்கந்த தமிழ் வித்தியாலயம் மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள ஹசலந்தூவ தமிழ் வித்தியாலயம் என்பன கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) தரம் கொண்ட பாடசாலைகளாகும். காலி மாவட்டத்தில் உடுகம கல்வி வலயத்தில் தல்கஸ்வெல தமிழ் வித்தியாலயம், தலங்கா சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் மற்றும் எம்பிலிபிட்டிய கல்வி வலயத்திலுள்ள திவித்துற தமிழ் வித்தியாலயம் என்பன சாதாரண தரம் வரையிலான பாடசாலைகளாகும்.
வட மத்திய மாகாணத்தைப் பொறுத்த வரையில், பொலன்னறுவை மாவட்டத்தில், திம்புலாகல கல்வி வலயத்தில் 06 தமிழ் பாடசாலைகள் அமைந்துள்ளன. இதில் 1895ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயமும், செவனப்பிட்டி தமிழ் மகா வித்தியாலயமும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் கலை மற்றும் வர்த்தக பாடப்பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளாக விளங்கினாலும், கலை துறைப் பாடங்களில் சில பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுவதாகத் தெரியவருகிறது.
முத்துக்கல் தமிழ் வித்தியாலயம் மற்றும் சொருவில் தமிழ் வித்தியாலயம் என்பன சாதாரண தரம் வரையிலான பாடசாலைகளாக உள்ள நிலையில், ரொட்டவெவ தமிழ் வித்தியாலயமும், சரஸ்வதி தமிழ் வித்தியாலயமும் ஆரம்பப் பாடசாலைகளாகவுள்ளன. இப்பாடசாலைகள் அனைத்திலும் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் தகைமை பெற்ற ஆசிரியர்கள் இன்றியே நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயமானது, உயர் தரத்தில் கலை மற்றும் வர்த்தக பாடப் பிரிவுகளைக் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது. எனவே மேற்படி பாடசாலைகளுக்கென கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, மொழி, சமயம் போன்ற பாடங்களுக்கான தகைமை வாய்ந்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கூற முடியுமா? கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா ,
அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்திற்கென இந்துசமய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும், மாணவர்களுக்கான விடுதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் குறித்த பாடசாலைக்கு மேலும் தமிழ் மாணவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய திட்டங்கள் ஏதும் உண்டா என்பது குறித்து விளக்க வெண்டம் எனவும் கோரினார்.
அத்துடன் நீராவியடி போன்ற தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உரிய முறையில் மேற்கொண்டால், அதிக மாணவர்கள் இப்பாடசாலையில் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. மேல் குறிப்பிடப்பட்ட இரு மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் எதுவுமே தேசிய கல்விக் கொள்கைக்கு அமைவாக செயற்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் விளக்கம் அளிக்க முடியுமா? எனவும் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலத்தையும், மாத்தறை மாவட்டத்திலுள்ள பேர்வலி தமிழ் வித்தியாலயத்தையும், உயர்தர வகுப்புக்களில் கலை, கணிதம், வர்த்தகம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடப் பிரிவுகளைக் கொண்ட தரமான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிக் கூற முடியுமா? எனவும்
காலி மாவட்டத்திலுள்ள தலங்கா சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தை உயர்தர வகுப்பில் கலை, வர்த்தக பாடப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலையாக தரமுயர்த்த முடியுமா? எனவும் மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் வழங்கவார் என எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|