துரோகியாக இனங்காணப்படும் என்ற அச்சமே விஜயகலாவின் எம்மீதான அவதூறுக்கு காரணம் – ஈ..பி.டி.பி குற்றச்சாட்டு!

Friday, July 20th, 2018

தனது அரசியல் நிலை சூனியமாகிவிடும் என்ற நோக்கத்துடனும்  துரோகி என்ற அவப் பெயரிலிருந்து தப்பிக்கவுமே தமது கணவரான மகேஸ்வரனின் படுகொலைக்கான  பழியை மீண்டும் எம்மீது விஜயகலா சுமத்தி வருகின்றார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீ-ரங்கேஸ்வரன்  குற்றம் சாட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நீதிமன்ற தீர்ப்பின் மூலம் யார் கொலைக் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான தண்டனையை புலிகளின் உறுப்பினர் ஒருவர் அனுபவித்துவரும் நிலையில் இவ்வாறான அவதூறுகளை எம்மீது மீண்டும் பூசுவதானது எம்மீதான அரசியல் காழ்ப்புணர்சி மட்டுமல்லாது  நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

மாறாக குறித்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்ட தரப்பினருக்கு சந்தேகம் இருந்தால் தமது ஆட்சியில் ஏன் மேன்முறையீடு செய்து அத்தீர்ப்பின் உண்மை நிலையை தற்போது வெளிப்படுத்த தயங்குகின்றனர்?

குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் தம்மில் பலர் கொலையாளிக்கு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரம் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்ற உண்மை அச்சநிலையே குறித்த கொலைக் குற்றவாளிகளை மறைக்க முற்படுகின்றனர்.

அத்துடன் கொலையைச் செய்தது புலிகள் தான் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்பதால் அதனூடாக தங்களை துரோகியாக மக்கள் இனங்கண்டு கொள்வர் என்ற அச்சமுமே அவ்வாறான செயற்பாட்டை அவர்கள் மேற்கொள்ள தயங்குகின்றனர்.

எமது அரசியல் வழிமுறைதான் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாகவும் தீர்வுகளை எட்டக்கூடியதானதாகவும் இருக்கின்றது என்பது மறைக்கப்படமுடியாத உண்மை. வன்முறைகளூடாக என்றும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்று நம்புபவர்கள் நாம். அந்தவகையில் தமது அரசியல் சூனியமாகிச் செல்கின்றது என்பதற்காகவே எம்மீது மீண்டும் பழிகளை சுமத்த முற்படுகின்றனர் இதை மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

அன்றும் இன்றும் என்றும் குறித்த வழக்கு தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதுமாத்திரமன்றி எமது கட்சி மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வாறான கொலைக் குற்றச்சாட்டுக்களின் உண்மைகள் பல நீதிமன்றின் தீர்ப்பினூடாக யார் செய்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களையும் ஏற்கனவே வழங்கியிருந்தது போல இனியும்  வழங்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: