தமிழில் உரையாற்றிய  பிரதமர் மோடி!

Saturday, May 13th, 2017

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலையகத்தில் தமிழ் மக்கள் முன்னிலையில் தமிழில் உரையாற்றி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து, நோர்வூட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தமிழிலும் உரையாற்றியுள்ளார்.

முதலில் “உங்களிடம் பேசக்கிடைத்த வாய்ப்பினை பெரிய பாக்கியமாக நினைக்கின்றேன்” என ஆரம்பித்தார் மோடி. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் அறிஞர் கனியன் பூங்குன்றனார் பாடிய “யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..” என்ற பாடல் வரிகளை படித்துக்காட்டியுள்ளார்.“நீங்கள் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள், தமிழ் தாய்” என தமிழின் பெருமையைப்பற்றி கூறினார்.

ஜாதக கதைகள் உட்பட பல்வேறு பௌத்த நூல்கள் தமிழ் மொழியின் தந்தையாக அகத்தியரை குறிப்பிடுகின்றன. கண்டியைச் சேர்ந்த நாயக்க அரச பரம்பரையினர் மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள் என்றும் நினைவூட்டினார்.

திருவள்ளுவர் கூறிய “ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் நுழை” என்ற திருக்குறளையும் இதன்போது மோடி கூறி இறுதியாக “நன்றி” தெரிவித்து தனது உரையை முடித்தார்.

எனினும் மோடிக்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உரையாற்றினார்கள். ஆனால் தமிழில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தமிழ் மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இலங்கை பிரதமரும், ஜனாதிபதியும் கூட தமிழில் பேசாத நிலையில், இந்தியப் பிரதமர் தமிழின் பெருமை பற்றியும், இந்து சமயம் பற்றியும், இலக்கியக்கதைகள், பாடல்கள் மற்றும் திருக்குறள் என அனைத்தும் தமிழில் பேசியமை மலையக மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts: