ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022

எமது நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை சிதைக்காத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்வதே மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காகவே நாம் தொடர்ந்தும் சேவையாற்றிகொண்டு இருக்கின்றோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிடைக்காமல் போவதும், கைவிடுவதும் கூட அரசியலில் எமக்கு மிகவும் பழக்கப்பட்டதொரு விடயமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் வேண்டாம் என்ற மக்களின் கோஷம் எமக்கும் கேட்கின்றது. அதனூடாக கூறவருவது, இந்த ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான வரலாற்றை நோக்கி புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றத்துக்கு குண்டுவீசி முழு நாடாளுமன்றத்தையும் அழிப்பதற்கான முயற்சியினால் ஏற்பட்ட விளைவை நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.

அன்று நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவால், வீதியெங்கிலும் இளைஞர்களின் இரத்தம் வழிந்தோடியது. டயர்களை கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். 1988 மற்றும் 89 களில் 60ஆயிரத்துக்கும் அதிகமான இளம் உயிர்களை நம் நாடு இழக்க நேரிட்டது. அன்று நாம் எமது இளைஞர்களின் உயிர்களை காப்பதற்காக மேற்கொண்ட கஷ்டம் உங்கள் மூத்தோர்களின் நினைவிலிருக்கும் என்பதை நாம் அறிவோம்.

தெற்கு போன்றே வடக்கு இளைஞர்களுக்கும் நான் அது குறித்து ஞாபகப்படுத்த வேண்டும். அந்த கடந்த காலத்தை உங்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம். பாராளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என்று மக்கள் பிரதிநிதிகளை வீதிகளில் கொன்றே, 1970-80 களில் வடக்கு இளைஞர்கள் ஆரம்பித்தனர்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கத்தினால் 30 ஆண்டு காலமாக வடக்கில் மட்டுமல்ல தெற்கு மக்களும் கஷ்டத்தை அனுபவித்தனர். கண்ணிவெடிகளுக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அவர்கள் இருந்த அடையாளமே தெரியாது போனது.

கொஞ்சம் கொஞ்சமாக பாடசாலை மாணவர்களையும் போராட்டங்களுக்கு இழுத்து செல்ல ஆரம்பித்தனர். அடுத்ததாக, மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அன்றும் நாடாளுமன்றம் வேண்டாம் என்றே ஆரம்பித்தார்கள். அவற்றின் விளைவை அறிந்தமையால், நீங்கள் பிறந்த நீங்கள் வாழும் இந்த நாட்டை மீண்டும் அந்த இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று அன்பார்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: