சுதந்திரதினத்தை முன்னிட்டு 545 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

Monday, February 4th, 2019

இலங்கையின் 71 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 545 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுடன் சம்பந்தப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இவர்களில் 27 பேர் வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் சிறையில் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 518 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியிருந்தன.

எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட மாட்டார் என கூறப்படுகிறது. ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது என்று தனி நபர்கள் உட்பட அமைப்புகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

Related posts: