சுகாதார சான்றிதழ் பெறப்படும் வரை சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதிவழங்க முடியாது – மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020

சமூக இடைவெளியை பேணுவதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் என்பவற்றினை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் சான்றிதழைப் பெற்ற பின்னரே மீண்டும் திறக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும் போதுதான் அதற்கான சான்றிதழ் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை ஏற்கனவே பொது மக்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகளுக்கு இணங்குவதால் மட்டும் மீண்டும் திறக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அழகு நிலையங்கள், சிகையலங்கார நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த சுகாதார நடைமுறைகள் குறித்து தொடர் ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.

இதுதொடர்பில் விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் சுகாதார நடைமுறைகள் வெளியிடப்படவுள்ளன.

அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களை இயக்குபவர்கள் நிறுவனம் அமைந்துள்ள பகுதியின் சுகாதார மருத்துவ அதிகாரியுடன் கலந்தாலோசித்து அவர்களின் சேவைகளை எளிதாக்குவதற்கான கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வசதி மற்றும் கட்டமைப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும் அந்தப் பகுதிக்குரிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நேரில் அவை முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பார்.

அதன்பின்னரே அவரது பரிந்துரையில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி சிகை அலங்கரிப்பு நிலையம் மற்றும் அழகு நிலையத்துக்கு திறப்பதற்கான அனுமதிச் சான்றிதழை்வழங்குவார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தச் சான்றிதழ் பெறப்படும் வரை நாட்டில் எந்தவொரு அழகு நிலையம் அல்லது சிகை அலங்கரிப்பு நிலையமும் மீண்டும் திறக்க முயற்சிக்கக்கூடாது” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: