சி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – யாழ். கஸ்தூரியார் கடைத்தொகுதி விவகாரம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, February 22nd, 2019

யாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச் சூழ அமைக்கப்பட்ட கடைத் தொகுதி விவகாரமானாலும் சரி முறைகேடுகளை ஏற்படுத்தியவர் யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே சிவஞானமே. இன்று இச்சபையில் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதற்கும் அவரே காரணமானவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் மாநகர சபையில் யாழ் நகரக்குளப் பகுதி புதிய கட்டடத் தொகுதி விவகாரம் தொடர்பில் விஷேட விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் மாநகர புதிய கடைத்தொகுதி அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அவை ஒன்றும் உருப்படியான தீர்வுகளை முன்வைத்திருக்கவில்லை. அவை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் இன்னொருவர் ஏவிவிட்ட கருத்துக்களையும் கூறி அம்புலிமாமா கதை போல அறிக்கையிட்டுவிட்டு சென்றுவிட்டன.

அது மாத்திரமல்லாது இந்த விசாரணைக் குழு விசாரணைகளை மேற்கொள்வதற்காக வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சிவஞானத்தை தலைமையாக கொண்டு அமைக்கப்பட்டது. அவரால் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த ஒருவரை தலைமையாகக் கொண்டு எவ்வாறு விசாரணை குழு அமைக்க முடியும்? அந்தவகையில் இது எமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு குற்றம் சாட்டுவதற்காக திட்டமிடப்பட்டு முற்கொள்ளப்பட்ட சதித் திட்டமொன்றாகும். அதுமட்டுமல்லாது இத்தகைய அறிவிலித்தனமான செயலை பகுத்தறிவு கொண்டவர்களால் செய்திருக்க முடியாது.

அத்தோடு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை நிராகரித்தும்விட்டது. அவைத்தலைவரான சிவஞானம், தான் செய்த மோசடிகள் எல்லாவற்றையும் மறைத்து தனக்கு வேண்டப்பட்ட அதிகாரியால் உண்மையான ஆவணங்களை மறைத்து தனக்கேற்றவாறு விசாரணைக் குழுவின் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார் என்பது ஆவணங்களின் சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனிடையே குறித்த கட்டட ஒப்பந்தம் தவறாயின் முதலாவதாகக் கட்டப்பட்ட கட்டடத் தொகுதி தொடர்பாக சபை எப்படி ஒப்பந்தம் செய்திருந்திருக்க முடியும்? இது எமது கட்சி மீது சேறுபூச தனது சுயநலனுக்காக செய்யப்பட்டதொன்று.

அந்தவகையில் இனிவரும் காலத்தில் எக்காரணம்கொண்டும் இது தொடர்பில் உண்மைக்கு புறம்பான வகையில் பேசுவதை விடுங்கள். இல்லையேல் இது தொடர்பில் நீதிமன்றம்  செல்லுங்கள் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

Related posts: