சிங்கள அரசோடு இணைந்து செயலாற்றியவர்களென எங்களைச் சுட்டுவிரல் நீட்டியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் –  ஈ.பி.டி.பியின்  சர்வதேச முக்கியஸ்தர்  விந்தன்

Sunday, April 24th, 2016

கடந்த காலங்களில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துதான் இந்த மண்ணில் மக்களுக்கான சேவைகளையாற்றியிருக்கின்றோம். சேவைகள் மட்டுமல்லாமல், ஒரு அரசியல் தீர்வுக்கான குரலையும் நாம் ஓங்கி ஒலித்திருக்கின்றோம். அதற்காக நாம் போராடியிருக்கின்றோம். சிங்கள அரசோடு இணைந்து நாம் செயலாற்றியவர்களென அன்று எங்களைச் சுட்டுவிரல் நீட்டியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று அதே சிங்கள அரசின் பின்கதவைத் தட்டி, கூனிக்குறுகி நின்று பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருப்பதுடன், பிரதிக் குழுக்களின் தலைவர் பதவியையும் அதே சிங்கள அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளார்கள். இதுதானா இவர்களது தேசியம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலணையில் சில தினங்களுக்கு முன்னர்  நடந்த கட்சியின் தேசிய எழுச்சி முன்னமர்வு மாநாட்லில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது –

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகத்தான் எதிர்க்கட்சி என்ற ஒரு கோதாவில் அமர்ந்திருக்கிறார்களேதவிர அவர்கள் எதிர்க்கட்சியினர் அல்லர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாங்கள் சிங்கள அரசோடு இணைந்திருந்து இந்த மக்களுக்காக எத்தனையோ பணிகளை  ஆற்றியிருக்கின்றோம், எங்களைக் குறைகூறும் இவர்கள் இன்று சிங்கள அரசோடு இணைந்திருந்து உங்களுக்காக எதை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்று அறிவீர்கள்.

நாம் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்தது சிங்கள மக்களின் பிரதேசங்களை அல்ல. உங்களுடைய அதாவது, தமிழ் மக்களின் பாதங்கள் நடந்து திரிகின்ற உங்களது வரலாற்று வாழ்விடங்களையே.

சிங்கள அரசோடு இணைந்து உங்களுடைய பிள்ளைகளுக்குத்தான் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தோம். இந்த மண் துக்கத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, ஏ-9 பாதை பூட்டப்பட்டு, யாழ் குடாநாட்டு மக்கள் பட்டினிச் சாவில் எரிந்துகொண்டிருந்த போது சிங்கள அரசோடு இருந்த எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா கப்பல் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியது தமிழ் மக்களுக்கேதவிர சிங்கள மக்களுக்கு அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி நாங்கள் 1990ஆம் ஆண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இந்த மண்ணில் கால் பதித்த நாள் முதல் இந்த மக்களுக்காக 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற அந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதைநோக்கி எங்களுடைய மக்கள் எங்களுடைய அரசியல் நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக வலியுறுத்திக் கூறியிருந்தது சிங்கள மக்களுக்காக அல்ல. எங்களுடைய தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகத்தான் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே உங்களின் வாழ்வியலுக்காக பாடுபடுவது உங்கள் தலைவன் டக்ளஸ் தேவானந்தா என்பவரும் அவருடைய கட்சியினரும் தான் என்பதை நிங்கள் புரிந்தகொள்ளவேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Related posts: