சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று : மேலும் 25 பேரின் நிலைமை குறித்து ஆராய்வு – காலவரையறையற்ற வகையில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டது!

Thursday, April 23rd, 2020

நாடுமுழுவதும் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணமுடியாத அழகுக்கலை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் காலவரையறையற்ற வகையில் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அத்துடன் குறித்த சிகை அலங்கரிப்பாளர் குறிப்பிட்ட சில தினங்களுக்குள் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த 25 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என மேலும் சந்தேகம் வெளியிப்பட்டுள்ளது. எனவே அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான 334 பேர் இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 107 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே நாட்டிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணமுடியாத அழகுக் கலையகங்கள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: