சாவகச்சேரியை பிரிக்க வர்த்தமானி தயார் – யாழ்.அரச அதிபர்!

Friday, July 20th, 2018

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
50 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு அதிகமான கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பிரதேச செயலர் பிரிவுகளை இரண்டாகப் பிரிக்கும் யோசனை கொள்கையளவில் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தபோதும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பிரதமரிடம் இது தொடர்பில் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டது. சாவகச்சேரிப் பிரதேச சபையை இரண்டாகப் பிரிப்பதன் ஊடாகவே அபிவிருத்தி அடைய முடியும் என்று சாவகச்சேரி பிரதேச செயலரும், ஏனையோரும் அந்தச் சந்திப்பில் திடமாகக் கூறினர்.
அதையடுத்து சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கான வர்த்தமானியை தயார்ப்படுத்துமாறு பிரதமர் பணித்தார்.
தற்போது வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டத்திலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகள் இரண்டாகப் பிரிப்பதற்கான முற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலுக்காக அனுப்பப்படுகின்றது. அவற்றுடன் இணைந்து சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவையும் இரண்டாகப் பிரிப்பதற்காக அறிவித்தலும் வெளியாகும்.
வர்த்தமானி அறிவிப்பின் பின்னர் தற்போதுள்ள சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரிவில் 32 கிராம அலுவலர் பிரிவுகளும், புதிதாக உருவாக்கப்படும் கொடிகாமம் பிரதேச செயலர் பிரிவில் 28 கிராம அலுவர் பிரிவுகளும் உள்ளடங்கும் என்றார்.

Related posts: