சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம் – 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 29th, 2023

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களில், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 568 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சார்த்திகள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்று தங்களது ஆசனங்களில் அமர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிததுள்ளார்.

எனவே பரீட்சார்த்திகள், அதற்கு முன்னரே பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

பரீட்சார்த்திகள் தங்களது அனுமதி பத்திரத்தையும், அடையாள அட்டையையும் கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும்.

இந்த நிலையில், பொதுமக்கள், மாணவர்களது பரீட்சைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: