சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மிகவும் கடினமான பணி – அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, August 7th, 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது மிகவும் கடினமான பணி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“சர்வ கட்சி அரசாங்கம்” என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்றால் அந்த வார்த்தையை நீக்கிவிட்டு “சர்வகட்சி ஆட்சி” என்று கூறலாம். இந்த சர்வகட்சி அரசாங்கத்திற்குள் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் கூட்டமைப்பு என்பன இணையாது என்று தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி ரணில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனை தொடர்பில் தென்னிலங்கை பிரதம சங்கநாயக வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதை நினைவுகூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: