சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையின் பொருளாதாரம் மீட்சி அடையும் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையின் பொருளாதார மீட்சி செயல்முறை வேகமாகும் என இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவளிக்கும் முழுமை முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டவுடன், இலங்கை அதன் மீட்சி மற்றும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் பாதையை நிர்வகிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் நிலையான எதிர்காலமானது அதிகரித்த ஏற்றுமதிகள், நேரடி வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலாத்துறையின் ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், கனியவளம், திருகோணமலை எண்ணெய் குதத் திட்டம் மற்றும் பால்வளத்துறை போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதில் பல இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எவ்வாறாயினும், இதற்காக இலங்கை தமது வர்த்தகச் சூழலை மேம்படுத்துவதற்கு முன்னோடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையை ஒரு சாத்தியமான முதலீட்டு இடமாகப் பார்ப்பார்கள் என இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையினால் இந்தியக் கடன்களை மீளச் செலுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய கடன்களில் சில நீடிப்புக்கள் கோரப்பட்டு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எனினும், இலங்கை தமது கடப்பாடுகளை உரிய நேரத்தில் நிறைவேற்றும் என்று இந்தியா நம்புவதாகவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: