சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து !

Sunday, April 7th, 2024

சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

செலவுகளை குறைப்பதற்காக பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே சந்தர்ப்பத்தில் நடத்த வேண்டுமாயின் சட்டரீதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தங்களது தரப்பினர் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில்

ஜனாதிபதித் தேர்தலுக்காக, இன்றிலிருந்து (07) நூறு நாட்களுக்குப் பின்னர், வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன்படி எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எந்த நேரத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கோர முடியும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், தேர்தல் ஆணையாளர் நாயகம் வேட்புமனு தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 28 முதல் 35 நாட்கள் வரை தேர்தலுக்கு முந்திய பிரசார கால அவகாசம் பிரசாரம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: