கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்!

Friday, January 31st, 2020

கொரோனா வைரஸ் குறித்து மக்களை அச்சமூட்டும் வகையில் யாரும் செயற்பட கூடாது. முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அளுத்கே தெரிவத்துள்ளார்.

வைரஸ் இலங்கையில் பரவும் பட்சத்தில் அதன் தாக்கம் பத்து நாட்களில் உச்ச அளவில் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொழும்பு வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு பெண்ணை தவிர வேறு நோயாளர்கள் கண்டறியப்படவில்லை.

வைரஸ் தாக்கம் தொடர்பில் இலங்கையில் உள்ள மக்களை அச்சத்திற்கு உற்படுத்தும் வகையில் எவரும் செயற்பட கூடாது. பாடசாலை மாணவர்களை முக கவசத்துடன் பாடசாலை வர வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் சில பாடசாலைகளில் வழங்கபடுகின்றது.

கொரோனா வைரஸ் தொடர்பில் தீவிரமான நிலைமை இலங்கையில் இல்லை. முக கவசங்கள் அணியவேண்டிய தேவை ஏற்படின் வைத்தியர்கள் சங்கம் அதுதொடர்பில் உடனடியாக அறிவித்தல் வழங்கும்.

எனினும் வைரஸ் இலங்கையில் பரவும் பட்சத்தில் அதன் தாக்கம் பத்து நாட்களில் உச்ச அளவில் இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பேராசியர்கள் மற்றும் வைத்தியர்கள் குறிப்பிடுவதை வைத்து நோக்கும்போது கொரோனா வைரஸ் இலங்கையில் தற்போது வரையில் எவருக்கும் பரவவில்லை.

இது தொடர்பில் அநேகமானோரால் பலவித கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி மக்களை அச்சத்திற்குட்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் வைரஸ் பரவும் நிலை ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலைமையில் முக கவசங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிலே இலங்கை உள்ளது.

வைரஸின் தாக்கம் இல்லாத நாட்களில் முக கவசங்களை உபயோக படுத்தும் போது இலங்கையில் வைரஸ் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கு முகங்கொடுக்க முடியாத சிக்கல் நிலை ஏற்படும்.

வியாபார நோக்கத்திற்காக முன்வைக்கப்படும் பொய்யான கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை அச்சத்திற்கு உற்படுத்த கூடாது.

வைரஸ் தாக்கம் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தற்போது 12 ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றில் எவ்வேளையிலும் மாதிரிகளை பெற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பரிசோதனைகளை தாமதப்படுத்தும் நிலைக்குற்படுத்த கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: