கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் – உலக சுகாதாரத்துறை அறிவிப்பு!

Sunday, April 26th, 2020

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில் வைரஸ் தொற்றுக்கு, சுமார் 29 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 58 ஆயிரம் பேர், கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் பலி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில், ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 416 பேரை கொரோனா தொற்றால் பலியாகியுள்ளதால் அந்த நாட்டின் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அங்கு பாதிப்பு எண்ணிக்கை ஒரு  இலட்சத்து 95 ஆயிரத்தை எட்டி உள்ளது.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் பலியானதுடன் அந்நாட்டின் உயிரிழப்பு 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

பிரான்ஸில் உயிரிழப்பு 22 ஆயிரத்தை தாண்ட, இங்கிலாந்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டி விட்டது.

அதுபோல பெல்ஜியத்தில் ஒரே நாளில் 238 பேர் கொரோனாவுக்கு பலியானதுடன அங்கு பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

ஜெர்மனியில் உயிரிழப்பு 5 ஆயிரத்து 800 கடந்துள்ளதுடன் ஈரானில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது.

சீனாவில், 82 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட, அங்கு உயிரிழப்பு 4 ஆயிரத்து 632 என்றும், பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெதர்லாந்து, பிரேசில், துருக்கி, கனடா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் உயர்ந்துள்ளன.

மொத்தத்தில், கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரம் ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29  இலட்சத்து 21 ஆயிரம் என்றும், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8  இலட்சத்து 36 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 இலட்சத்து 80 ஆயிரத்து 244 பேர், மருத்துவமனைகளில் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: