கொரோனா வைரஸ் எதிரொலி: பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவு – உலக வங்கி!

Sunday, April 12th, 2020

இலங்கை இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 40 வருடங்களில் மோசமான பொருளாதார பின்னடைவு எதிர்நோக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை இந்தியா உள்ளிட்ட 8 தென்னாசிய நாடுகளில் இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 1.8 முதல் 2.8 வீதமாகவே இருக்கும் என்று உலக வங்கி தமது பொருளாதார நோக்கு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த நாடுகளில் 6.3 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று தாம் எதிர்பார்த்ததாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் பெரிய நாடான இந்தியாவில் ஏப்ரல் முதல் ஆரம்பித்த நிதியாண்டில் 1.5வீதம் முதல் 2.8 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கடந்த மார்ச் 31இல் முடிவடைந்த நிதியாண்டில் 4.8 முதல் 5வீதமாக இருக்கும் என்று தாம் எதிர்பார்த்ததாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவை தவிர நேபாளம், பூட்டான், பங்களாதேஸ் போன்ற நாடுகளும் பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். அதேநேரம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளில் மந்தமான பொருளாதார நிலையை கொண்டிருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து முடக்கநிலையை அறிவித்துள்ள இந்தியா வறுமையில் வாடும் மக்களுக்காக பணமாக 23 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.

பாகிஸ்தான் 6 பில்லியன் ரூபாவை பொருளாதார ஆதரவுக்காக ஒதுக்கியுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: