கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜானதிபதி உத்தரவு!

Saturday, May 8th, 2021

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறுகிய காலத்தில் முடியுமானளவு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென நாளாந்தம் ஒன்றுகூடும் கொரோனா குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நோய் பரவுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ள மேல் மாகாணம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ரஷ்ய நாட்டின் உற்பத்தியான ஸ்புட்னிக் (Sputnik) தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பமானது.

சீனாவிலிருந்து கிடைக்கப்பெற்ற 6 இலட்சம் “சைனோபாம்” தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் உள்ளன. 51 நாடுகளில் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு “சைனோபாம்” தடுப்பூசிகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.

அந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி அந்த தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு உள்ள வாய்ப்புகளை கண்டறியுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு “அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

“அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசிகள் மேலதிகமாக உள்ள நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கலந்துரையாடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தல் மூலம் நோய் பரவுவதை தடுப்பதற்கு அதிகபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் அனைத்து வைத்தியசாலைகளின் வசதிகளையும் தேவையான அளவில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: