கொரோனா உயிரிழப்பு உயர்வு – அமெரிக்கா – கனடா எல்லைகளுக்கு பூட்டு!

Sunday, April 19th, 2020

அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புக்களால் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அழித்துக் கொண்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் நாள் தோறும் சுமார் 7,000 பேர் பலியாகின்றனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் படுபயங்கரமாக உள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,867 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 39,014 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738,792 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

இருநாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி எல்லைப் பகுதி சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அத்தியாவசியமான போக்குவரத்திற்கு மட்டும் சாலைகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: