கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனா? சுமந்திரனா? – சந்தேகத்தில் அரசாங்கம்!
Wednesday, July 13th, 2016தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
சம்பந்தனின் கருத்துகளை மீறி சுமந்திரன் கருத்துக்களை முன்வைப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நியமிக்க இலங்கை அரசாங்கம் இடமளிக்கும் எனவும், அரசியல் அமைப்பில் அதற்கான சிக்கல்கள் இல்லையெனவும் சுமந்திரன் வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரக்கதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் –
இலங்கை அரசாங்கம் சரியான வகையில் செயற்படுகின்றது எனவும் சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்றை பத்திரிகையின் முன்பக்கத்தில் நான் அவதானித்தேன். அவர் தமிழ் மக்களின் தலைவர். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர். அவ்வாறு இருக்கும் ஒருவர் சரியான வகையில் கருத்து ஒன்றை முன்வைக்கும் நிலையில் சுமந்திரன் சர்வதேச அரங்கில் தெரிவிக்கும் கருத்துக்கள் எந்தளவு முக்கியம் பெறும்.?
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பதில் அரசாங்கத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தன் பொறுப்புமிக்க கருத்து ஒன்றை முன்வைத்துள்ள நிலையில் அதையும் மீறிய வகையில் சுமந்திரன் கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகுமா என நாம் கேள்வி எழுப்புகின்றோம் என தெரிவித்துள்ளார்
Related posts:
|
|