குப்பி விளக்குச் சரிந்து தீப்பிடித்ததில் படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, August 14th, 2016

குப்பி விளக்குச் சரிந்து தீப்பிடித்ததில் காயமடைந்த மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த  இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை(12) உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடந்த-04 ஆம் திகதி இரவு வீட்டு விறாந்தையில் போடப்பட்டிருந்த மின் விளக்கு ஒளிராத காரணத்தால் தனது கணவரை அண்மையிலுள்ள கடையொன்றுக்குக் குறித்த பெண் அனுப்பியுள்ளார். அவ் வேளையில் குப்பி விளக்குக் கைதவறிக் கீழே விழுந்துள்ளது. இதனால், உடல் முழுவதும் எரிகாயங்களுக்கு உள்ளானவரை அயலவர்கள் மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகள் பெறும் பொருட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் உசாந்தினி( வயது-19) என்பவராவார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts: