கிராம அலுவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படாமையால் மக்கள் அவதி!

Friday, October 7th, 2016

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 46 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ள நிலையில் 16 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு நிரந்தரமாக கிராம அலுவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதுடன் பிரதேச செயலக மட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் 20 சமுர்த்தி அலுவலர்கள் இல்லாது இருப்பதால் பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதில் கடமையாற்றும் அலுவலர்களைத் தேடி அலைந்து திரியும் அவலநிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மக்களின் இடம்பெயர்வின் பின்னரான மீள்குடியேற்றத்தின் போது 46 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 13ஆயிரத்து 213குடும்பங்களைச் சேர்ந்த 42ஆயிரத்து 55அங்கத்தவர்கள் மீள்குடியேறியுள்ளனர். வன்னியில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவானது பாரிய அழிவுகளைச் சந்தித்த பிரதேசமாகும். இங்கு மக்கள் மீள்குடியேறி ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் நிரந்தர கிராம அதிகாரிகளும் நிரந்தர பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் மற்றும் சமுர்த்தி அலுவலர்களும் நியமிக்கப்படாது இருப்பதன் காரணமாக மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது கிராமங்களுக்கான பதில் கிராம அலுவலர்களைத் தேடியும் பதில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலர்களைத் தேடியும் அலைந்து திரியும் அவலநிலை காணப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேற்படி பிரதேசத்திற்கான அலுவலர்களுக்கான வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உதவ வேண்டுமென பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

150929160016_mullaithivu_512x288_bbc_nocredit

Related posts: