நாளை கொடியேறுகிறது நல்லூர் கந்தன்!

Wednesday, August 15th, 2018

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் சம்பிரதாய பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

இதன்படி யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 அளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை சென்றடைந்தது.

பின்னர் ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

Related posts: