கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளுடன் பாடசாலைகள் உருவாக்கப்படல் வேண்டும் – யாழ்ப்பாண மாவட்டச் செயலர் வேதநாயகன் !

கல்வியில் ஏற்படும் அபிவிருத்தியே ஏனைய அபிவிருத்திகளை மேல்நிலை அடையச் செய்யும். இதனைக் கருத்தில்கொண்டு கல்வி அபிவிருத்திக்கு சகல தரப்பினரும் உழைக்க வேண்டும். மாணவர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே கல்வியைத் தொடர வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் சமூகத்தினர் வழிப்புணர்வோடு தொழிற்பட வேண்டும் என்று யாழ் மாவட்டச் செயலர் வேதநாயகன் தெரிவித்தார்.
அச்சுவேலி மத்திய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சி.திரிகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவட்டச் செயலர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த கால இடப்பெயர்வுகளினால் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் வாழ்க்கைச் சமநிலை பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் கல்வியில், சமூகத்தில் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுவிட்டன. கிராமப்புற பாடசாலைகள் சேதமடைந்தமையால் நகரப் பாடசாலை நோக்கி மாணவர் செல்லும் நிலை ஏற்பட்டது.
கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளுடன் பாடசாலைகள் உருவாக்கப்படல் வேண்டும். கல்வியில் ஏற்படக்கூடிய அபிவிருத்தியே ஏனைய துறைகளில் மேலான அபிவிருத்தியை ஏற்படுத்தும். இதனைக் கருத்தில் கொண்டு கல்வியை முன்னேற்ற வேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு 125 ஆண்டுகள் வளர்ந்து வந்த அச்சுவேலி மத்திய கல்லூரியின் விழா பாடசாலை மண்டபத்தில் நடைபெறாமல் கல்யாண மண்டபத்தில் நடைபெறுவது கவலையாக உள்ளது. என தெரிவித்த அவர்
சமூக நிறுவனங்களின் வளர்ச்சியில் நிறுவனம் சார் சமூகம் அக்கறையுடன் இருந்து உதவ வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|