காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Wednesday, September 16th, 2020

எந்தவொரு ஆவணம் இன்றி அரச காணிகளில் வசித்து வருபவர்களுக்கு அந்த காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான வனப்பகுதிகளில் அனுமதியின்றி காணியை கைப்பற்றும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணி ஆணையாளர் ஆர்.எம்.சீ.எம் ஹேரத்தின் கையெழுத்துடன் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில், அரச காணிகளில் நிரந்தர வீடுகளை நிர்மாணித்து விவசாயத்தை முன்னெடுத்தல் அல்லது எதேனும் அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளவர்களுக்கு சட்டரீதியான உரிமை பத்திரத்தை வழங்குவதற்கு விண்ணப்பம் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும் போது அது எந்த சட்ட விதிகளின் கீழ் வெளியிடப்படுவதாக குறிப்பிட வேண்டும் என்ற போதும் இந்த வர்த்தமானியில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படாததால் சிக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் காணி ஆணையாளர் திணைக்களத்தின் உதவி காணி ஆணையாளர் சேவ்வந்தி அமரசேகரவை அரச காணி சட்ட விதிகளுக்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது சந்தர்ப்பத்தில் விண்ணப்பங்கள் மாத்திரேம கோரப்படுவதாகவும் காணி வழங்கப்படும் போது அனைத்து சட்டரீதியான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் என உதவி காணி ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: