கரையோர பகுதிகளில் அனுமதியின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத்தடை – யாழ்.அரச அதிபர்!

Wednesday, November 2nd, 2016

யாழ் மாவட்டக் கரையோர பகுதிகளில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியின்றி எந்த வகையான அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளக்கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகளவான கட்டுமான நடவடிக்கைகள் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கரையோர வலயம் என கருதப்படும் கடற்கரைப் பகுதியில் இருந்து  தரை நோக்கிய 300 மீற்றர் தூர எல்லையும் மற்றும் கடலை நோக்கிய 2 கிலோமீற்றர் வரையான எல்லையையும் உள்ளடக்கிய பிரதேசங்களில் கடற்றொழில் தேவை கருதியோ வேறு எந்த தேவை கருதியோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கட்டுமாணங்களை மேற்கொள்ளல் புனரமைத்தல் , மற்றும் கடற்றொழில் சார்ந்த கட்டமைப்புக்களை (வான் தோண்டுதல் வாடி அமைத்தல் ஓய்வு மண்டபம் மற்றும் இதர கட்டமைப்புக்கள்) நிர்மாணிப்பதற்கும் கரையோரம் பேணல்  மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியினை பெறுவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

கரையோர வலயத்தில் கட்டுமாணங்கள் தொடர்பில் உரிய முன் அனுமதியினை யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.; சட்டவிரோதமாக கரையோர வலயத்தினுள் அமைக்கப்பட்டு வருகின்ற கட்டமைப்புகளுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பெற்ற 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையை பின்பற்றுவதனூடாக எமது கடல் சார் சூழலையும், வளங்களையும் எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் பணியில் நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

99c6efcfc2e288013afe6593db824697_XL

Related posts: