அலுவலக கணக்கு அறிக்கைகளில் தவறுகள் நடந்தால் சட்டம் பாயும் ;கணக்காளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, December 2nd, 2018

அலுவலக கணக்கு அறிக்கைகளில் தவறுகள் நடந்தால் சட்டம் பாயும் என்று கணக்காய்வாளர் நாயகம் எச்.எம்.காமினி விஜயசிங்கே திணைக்கள தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண அமைச்சின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், கணக்காளர்கள் ஆகியோருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்ற போதே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அலுவலக கணக்கு விவரங்கள் வருட இறுதியில் கணக்காய்வு செய்யப்படும். அதற்கு உரிய அதிகாரிகள் அலுவலர்களுக்கு வருகை தந்து அதனை பார்வையிடும் செயற்பாடு வருடாந்தம் நடைபெற்று வருகிறது.

கணக்குகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்படும். கணக்கில் பாரிய தவறு என்றால் விசாரணை நடத்தப்படும் நடைமுறையே இதுவரை காணப்பட்டது. கணக்காய்வு தொடர்பான நடவடிக்கைகள் மோசடி இல்லாமல் நடைபெறுவதற்கு கணக்காய்வு சட்டவரைவு தற்போது ஆக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம் கடந்த ஜீலை மாதம் 17 ஆம் திகதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் அதிகாரிகளின் கடமைகள், நோக்குகள், அதிகாரம், சட்டநடைமுறை என்பன தெளிவாக உள்ளடக்கப்பட்டு சட்டவரைவு ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே கணக்கு அறிக்கைகளில் ஏற்படும் தவறுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மிகைக் கட்டணம் செலுத்தும் நிலை மேலும் வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்படுவர். ஆகவே கணக்கு அறிக்கைகள் சரியானதாக அமைய வேண்டும். அல்லது புதிய சட்ட வரைவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: