கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி அறிமுகம்!

Sunday, March 17th, 2024

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சமுத்திரம் மற்றும் கரையோரத்தின் தூய்மையைப் பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு இந்த புதிய செயலி உதவும் எனவும் குறிப்பிட்டார்.

கரையோரத் தூய்மைத் திட்டங்கள் மற்றும் கரையோரத் தூய்மையைப் பேணுதல் தொடர்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, கடலோர பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது நல்ல பங்களிப்பாக அமையும் என்றார்.

ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மற்றும் கழிவு நீர் நீண்ட வெளியேற்ற குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதாலும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பிற கடல் நடவடிக்கைகள் மூலம் கடற்கரை மற்றும் கடல் வளங்கள் கடுமையாக மாசுபடுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியது.

பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீட்டுடன் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதுடன், இந்த தொலைபேசி செயலியை இப்பணியின் சரியான ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: