கச்சாய் – பருத்தித்துறை பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பித்துத் தருமாறு கோரிக்கை!

Thursday, August 9th, 2018

வீதி பழுதடைந்து காணப்பட்டதால் நிறுத்தப்பட்ட கச்சாய் – பருத்தித்துறை பேருந்து சேவையைத் தற்போது வீதி செப்பனிடப்பட்டதால் மீண்டும் ஆரம்பிக்குமாறு கச்சாய் பொது அமைப்புக்கள் இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

கச்சாய் பகுதி மக்கள் வடமராட்சிப் பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காகச் சென்று வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன்கருதி பருத்தித்துறை சாலையினரால் பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் ஊடாக கச்சாய் துறைமுகம் வரை பேருந்து சேவையினை நடத்தினர்.

இதனால் இப் பகுதி விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் தமது உற்பத்திப் பொருள்களை வடமராட்சிப் பகுதிக்குச் சந்தைகளில் விற்பனை செய்வதற்கு சென்று வந்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து கச்சாய்க்குச் செல்லும் வீதி மிகவும் மோசமடைந்து காணப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கடந்த வருடம் கொடிகாமம் தொடக்கம் கச்சாய்த் துறைமுகம் வரையான வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சாலையினர் தினமும் கொடிகாமத்திலிருந்து கச்சாய் சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையினை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறு பருத்தித்துறையிலிருந்து கச்சாய்த் துறைமுகம் வரை இடம்பெற்ற சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு கச்சாய் பொது அமைப்புக்கள் பருத்தித்துறை சாலை முகாமையாளரை கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் பருத்தித்துறை பேருந்து தரிப்பிட சாலை முகாமையாளருடன் கூறுகையில் –

ஆரம்பத்தில் கச்சாய் – பருத்தித்துறை பேருந்து சேவை ஒன்று நடைபெற்றது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. மீண்டும் அந்த பேருந்து சேவை ஏற்படுத்தித் தருமாறு தெரிவித்து எனக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாகப்  பருத்தித்துறை- கொடிகாமம் வரை செல்லும் பேருந்து சேவையை நீடித்து இரண்டு தடவை கச்சாய் வரை செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts: