ஐந்து வீரர்களின் தகுதி நீக்க விவகாரத்தில் தலையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியது மகாஜனா!

Saturday, July 14th, 2018

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஐந்து வீரர்கள் மேன்முறையீட்டுக் குழுவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி.

தொடரின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளச் சென்ற தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் வீரர் மேன்முறையீட்டுக் குழுவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

குறித்த மாணவன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகள் தோன்றி இரண்டு தடவைகளும் சித்திபெறாது விட்டவர். இதனால் அவரைப் பாடசாலை மாணவனாகக் கருத முடியாது. ஆகவே அவர் இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாது என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த மாணவன் வினாத்தாளை மீளத் திருத்தும் நடவடிக்கைக்காக விண்ணப்பித்துள்ளார். எனவே அதில் அவர் சித்தியடைந்தால் அவர் தனது உயர்தரக் கல்வியைத் தொடர முடியும். ஆக அவரின் பாடசாலை வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை. அவர் பாடசாலை மாணவன்தான் என்பது பாடசாலையின் விவாதம்.

அத்துடன் அந்த மாணவனின் பெயர் இடம்பெற்ற காரணத்தால் பாடசாலையில் அஞ்சலோட்ட அணியையே தகுதி நீக்கம் செய்தது மிகப்பெரும் தவறு. ஏனெனில் தடகள அணியில் ஆறு வீரர்கள் உள்ளனர். சர்ச்சைக்குரிய மாணவனை விடுத்து ஏனைய நால்வரைக் களமிறக்க முடியும் என்றும் வாதிடுகிறது மகாஜனா.

இந்த விவகாரம் தொடரின்  இறுதிநாளான நேற்று முன்தினம் பூதாரமாகியது. இதையடுத்து தமக்கு நீதிவேண்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியது மகாஜனா. முனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் அவ்வாறானதொரு முறைப்பாடு கிடைத்தமையை உறுதிப்படுத்தினர்.

Related posts: