எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும் – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Sunday, December 18th, 2016

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அடுத்த 27 ஆம் திகதி தனக்கு கிடைத்ததும் 28 ஆம் திகதி அதனை வர்த்தமானியில் வெளியிட உத்தேசித்துள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செயதிருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த, அவர், என்னால் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தாமதமடையவில்லை.

கடந்த ஆட்சியாளர்களின் தவறினாலே எல்லை நிர்ணய அறிக்கை 3 வருடங்கள் தாமதமடைந்தது. யாரோ செய்த பாவச் சுமையை எனக்கு சுமக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

4000 எல்லைகளில் 2 ஆயிரம் தொடர்பில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. சகல கட்சிகளினதும் வேண்டுகோளுக்கிணங்க எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்முறையீடுகள் பெறப்பட்டு அதனை ஆராய குழு அமைத்தோம்.

இந்த குழு எனது தலையீடு இன்றி சுயாதீனமாக செயற்பட்டு வருகிறது. டிசம்பர் 31 வரை அதற்கு காலக்கெடு வழங்கியுள்ளேன். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்போவதில்லை. எதிர்வரும் 24 ஆம் திகதி எனக்கு அறிக்கையை கையளிப்பதாக குழு அறிவித்துள்ளது. மொழிபெயர்ப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. நாளை அதை தந்தால் மறுதினமே அதனை வர்த்தமானியில் வெளியிட தயாராக உள்ளேன்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளுராட்சி சபைகள் செயற்படுவதில் சிக்கல் உள்ளது.

அமைச்சர் அதாவுல்லா அமைச்சராக இருந்தபோது வேறு ஒருவரே அந்த அமைச்சை நடத்தினார். இதில் ஏற்பட்ட தவறுக்கு என்மீது குற்றச் சுமத்த முடியாது.

மார்ச்சில் தேர்தல் நடத்த எதிர்பார்க்கிறோம். 28 ஆம் திகதி கையொப்பமிட்டால் அதன் பின் தேர்தல் ஆணையாளரிடமே அடுத்த கட்ட பொறுப்பு இருக்கிறது.

தேர்தல் நடத்துவதை தாமதிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. அறிக்கை கிடைப்பதிலே தாமதம் உள்ளது என்றார்.

fizer musthaba 5565r

Related posts: